நன்செய் அறக்குழு இளைஞர்கள் செய்த கிராமசபைக் குறித்த மக்கள் விழிப்புணர்வு
நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது.

ஊராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது.





அதி உள்ள கேள்வி பதில்கள் பின்வருமாறு…
கிராம சபைக் கூட்டம் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
- எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும்?
ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி).
- தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?
ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
- கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருடையது?
நமது கிராம ஊராட்சி தான் கிராமசபை கூட்டத்திற்க்கான அறிவிப்பை கொடுக்கவேண்டும். உங்கள் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து கிளர்க்கோ கிராமசபை கூட்டம் நடக்கும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றைக் கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
- கிராம சபை கூட்டம் நடைபெறும் என எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுக்க வேண்டும்?
கிராம சபை நடைபெறும் தேதியில் இருந்து ஏழு நாட்களுக்கு முன்பு கிராம சபை கூட்டம் பற்றிய அறிவிப்பைக் கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
- கிராம சபைக் கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?
நமது கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாயக் கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
- கிராம சபைக் கூட்டம் எப்பொழுதும் ஒரே இடத்தில்தான் நடத்த வேண்டுமா?
அப்படி இல்லை. நமது ஊராட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு பொது இடத்திலும் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம். பல உட்கிராமங்களை கொண்ட ஒரு கிராமப் பஞ்சாயத்தில் ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்தையும் ஒவ்வொரு உட்கிராமத்தில் சுழற்சி முறையில் நடத்தலாம்.
- கிராம சபையில் அனைவரும் தரையில் தான் அமர வேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியல் அமரலாமா?
கிராம சபையில் அனைவரும் சமமாக அமரவேண்டும் என்பது சட்டவிதி. பொதுவாக அனைவரும் தரையில்தான் அமர்வார்கள். முதலமைச்சரே வந்தாலும் கிராமசபையில் மக்களுடன் சமமாகத்தான் அமரவேண்டும்.
நமது ஊர் கிராம சபைக்கு பிரதம மந்திரி வருகிறார் என்றால் கிராம மக்கள் தரையில் அமர்ந்திருந்தால் பிரதமரும் தரையில் தான் அமர வேண்டும்.
- கிராம சபைக் கூட்டத்தை நடத்தாமல் இருக்க முடியுமா?
முடியவே முடியாது. ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய தேதிகளில் கட்டாயம் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கூட்டம் நடைபெறாமல் போகுமானால், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரோ, வட்டார வளர்ச்சி அலுவலரோ தான் பொறுப்பேற்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடக்காமல் போனால், பஞ்சாயத்துகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார்.
மேலும் சில பஞ்சாயத்துகளில் மக்களுக்கு அறிவிப்புக் கொடுக்காமல் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு, கிராம சபை கூட்டம் நடந்ததாக பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வருவதுண்டு. அவ்வாறு நடக்க நமது கிராம மக்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் மாவட்ட ஆட்சியருக்கு அதைப்பற்றி புகார் தெரிவிக்க வேண்டும்.
- கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் யாரிடம் புகார் கொடுப்பது?
குறிப்பிட்ட தேதிகளில் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடந்தே ஆகவேண்டும். முறையான அறிவிப்பு இல்லாததால் தான் பல ஊர்களில் கிராம சபை கூட்டம் நடப்பது மக்களுக்குத் தெரிவதில்லை. அதனால், கிராம சபையே நடக்கவில்லை என நினைத்துக்கொள்கிறார்கள். கிராம சபை கூட்டங்களுக்கு போதிய அறிவிப்பு கொடுக்க வேண்டுமென உங்கள் கிராம ஊராட்சிக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை வைக்கவேண்டும்.
- கிராம சபையில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
- இவர் கிராம சபையில் கலந்து கொள்ளகூடாது என யாரையாவது ஒதுக்கிவைக்க முடியுமா?
முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராமசபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்.
- பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்துகொள்ளலாமா?
கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்த கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்றொரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.
- கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?
உங்கள் கிராமப் பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்த பட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த கிராம சபை நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். அதே போல உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100பேர் கிராம சபையில் கலந்துகொள்ள வேண்டும். 3001 முதல் 10,000பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும், 10,000க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்துகொள்ள வேண்டும் என்கிறது அரசாணை. (அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை நாள்: 25.09.2006).
- அரசாணையில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் கலந்துகொள்ளாதபோது கிராம சபையின் நிலை என்ன?
அரசாணையில் குறிப்பிட்டுள்ள அளவிற்குக் கிராம சபையில் மக்கள் கலந்துகொள்ளாதபோது, கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படும்.
- கிராம சபையின் தலைவர் யார்?
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். பஞ்சாயத்துத் தலைவர் இல்லாத போது துணைதலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாத போது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
- சிறப்பு கிராம சபை என்றால் என்ன?
தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும். ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) இந்த நான்கு கிராம சபைகளையும் தாண்டி மற்ற ஏதேனும் காரணங்களுக்கு கூடுதலாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபையானது, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.
- சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்து தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?
சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்ட பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக்கொண்டு (சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பார்) சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கவேண்டும்.
- எந்தெந்த விடயங்களுக்காகக் கிராம சபையில் விவாத்தித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?
உங்கள் கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விடயத்திற்கும் அல்லது தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்து கிராமத்தின் பிரச்சினையை தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் ஏரியை அல்லது குளத்தை பாதுகாக்க தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் அரசு பாதுகாக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.மேலும் நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராமசபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச் சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனிநபர் உரிமை போன்ற விடயங்களை மீறுவதாக உங்கள் கிராமசபை தீர்மானம் இருக்கக்கூடாது.
- ஊரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாமா?
நிச்சயமாக நிறைவேற்றலாம்.
- நமது கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடை மூடப்படவேண்டும் என்று நமது கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.
- நமது பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை இல்லை என்றாலும், புதிதாக டாஸ்மாக் கடை உங்கள் ஊரில் திறக்கக்கூடாது எனவும் கிராமசபையில் தீர்மானம் நிறை வேற்றலாம்.
- சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றலாம்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களாகிய நமக்கு நூறு சதவிகிதம் உரிமை இருக்கிறது. இது நம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள ஜனநாயக உரிமை. கிராம சபையில் இவ்வாறு தீர்மானம் கொண்டுவர மக்கள் கோரிக்கை வைத்தால் அதற்கு தடைசொல்ல அரசு அதிகாரிகளுக்கோ, பஞ்சாயத்து தலைவருக்கோ அதிகாரம் கிடையாது.
- தீர்மானம் இந்த வடிவில் தான் இருக்க வேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?
இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என எந்தவிதமான நிபந்தனையும் இல்லை.
- மக்கள் முன் மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?
முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
- கிராம சபையில் எத்தனைத்தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?
இத்தனைதீர்மானங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்திப் பயன் பெற வேண்டும்.
- கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?
சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
- கிராம சபை தீர்மானத்தை நடைமுறை படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?
பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். கிராம இளைஞர்கள், மகளிர் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரிதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராமசபை தீர்மானத்தை விரைவாக நடைமுறை படுத்தலாம்.
- கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்கு செல்லுபடி ஆகும் ?
கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து (மறு பரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோம் அல்லது மறுத்தோ) வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக்கூடும்.
- கிராமசபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெற முடியுமா? அதற்க்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?
கிராமசபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெற முடியும். அதற்க்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை இல்லை.
- கிராம சபை தீர்மான நகலைத்தர பஞ்சாயத்துத் தலைவரோ, கிளர்க்கோ மறுத்தால் என்ன செய்வது?
கிராம சபை தீர்மானத்தின் நகலைத் தரமுடியாது எனப் பஞ்சாயத்து தலைவரோ, கிளர்க்கோ சொல்லமுடியாது. உங்கள் கோரிக்கையையும் மீறி அவர்கள் கிராம சபை தீர்மானத்தின் நகலைத் தர முன்வரவில்லை என்றால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிராம சபை தீர்மானத்தின் நகலைப் பெறமுடியும்.
- முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விஷயங்கள் என்னென்ன?
- மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது
- மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது
- மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்
- பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்
- முறையான சமூக தணிக்கை நடைபெறுவது
- கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது
- கிராம வளிர்ச்சி திட்டத்தை கிராம சபை மூலம் தயார்செய்வது.
- கிராம சபை தீர்மானங்கள் வெற்றி பெற்ற முன்னுதாரணங்கள் ஏதேனும் உண்டா?
பல முன்னுதாரணங்கள் உண்டு. திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தின் 100 ஏக்கர் மேய்க்கால் நிலத்தில் தங்களது கழிவுகள் அனைத்தையும் கொட்ட முயற்சித்தனஅருகில் இருந்த நகரங்கள். கிராம மக்கள் வழியறியாது தவித்தனர். அந்த எளியச் சரியான நேரத்தில் கைகொடுத்தது கிராம சபை. கிராம சபையின் அதிகாரங்களை அறிந்திருந்த மக்கள், தங்கள் கிராமத்தை அழிக்க வந்த திட்டம் வேண்டாமென கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் இயற்றினர். மக்கள் தொடர்ந்து ஜனநாயக முறையில் போராடி வந்தனர் . மக்கள் குரலுக்கு செவிசாய்த்தது நீதிமன்றம். கிராம சபை தீர்மானத்தை முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொண்டதோடு பல கள ஆய்வு முடிவுகளையும் கருத்தில் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், குத்தம்பாக்கத்தில் கழிவுகள் கொட்டுவதற்கு தடை விதித்தது. பசுமை தீர்ப்பாயமும் அதை உறுதிப்படுத்தியது. குத்தம்பாக்கத்தின் பசுமை காக்க கிராம சபை முக்கிய பங்காற்றியது.
அதிகத்தூர் கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு புதிய குடியிருப்பு அமைத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க பெரிதும் உதவியது கிராம சபைக்கு இருந்த அதிகாரங்களே.
இப்படி பல் கிராமங்களின் இயற்கை வளங்களைக் காக்கவும் ஏழை எளிய மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கவும் கைகொடுப்பது கிராம சபையே.
- கிராம சபை தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வழிகள் என்ன?
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் எல்லாம் நடந்துவிடும் என முடிவு செய்துவிடக்கூடாது. தீர்மான நகலைப் பெற்றுக்கொண்டு கிராம இளைஞர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சி எடுத்துச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கும் நினைவூட்டல் அனுப்ப வேண்டும். தொடந்து கண்காணிப்பதன் மூலமே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
